2000 கி.மீ நடந்து வந்த புலம்பெயர் தொழிலாளி பாம்பு கடித்து மரணம்..!

1054

உத்தரபிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி 2,000 கி.மீ நடைபயணத்திற்கு பிறகு பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கால் வேலையின்றி நடைபயணமாக ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் தொடரும் அவர்களது பயணத்தின் முடிவு அனைவருக்கும் சிறப்பாக அமைவதில்லை. ஒரு சிலர் விபத்து, பசி உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படுகிறது. 

இந்நிலையில் உத்தரபிரதேச ,மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான இளைஞர் சல்மான் கான் பெங்களூரூவில் கட்டுமான வேலை பார்த்து வந்துள்ளார். ஊரடங்கால் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வேலை இல்லாமல் தவித்த அவர் தனது நண்பர்களுடன் மீண்டும் சொந்த ஊர் திரும்ப நினைத்துள்ளார். 

ரயிலில் பயணிக்க முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்காததால் நடந்தே ஊர் திரும்பியுள்ளனர். சுமார் 12 நாட்களாக 2,000 கி.மீ பயணம் செய்து தனது சொந்த கிராமத்தை அடைந்துள்ளார். வழியில் பல இடங்களில் காவல்துறையினர் தடுத்தி நிறுத்தியதால், ரயில் தண்டவாளம் வழியாக சில பகுதிகளில் நடந்து வந்துள்ளனர்.

 தனது மகனை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த தாய் மகிழ்ச்சியில் கட்டி அரவணைத்து பாசத்தை பொழிந்துள்ளார். ஆனால் அவரது மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நீண்ட தூரம் பயணம் செய்ததால் கை, கால்களை கழுவுவதற்காக கரும்பு தோப்புக்குள் சென்றுள்ளார்.

ஆனால் அவர் திரும்பி வராததால் அம்மா தோப்புக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போதுதான் மகன் பாம்பு கடித்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. 
இதனை பார்த்து அதிச்சியடைந்த தாய் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஏழ்மை நிலைமையில் உள்ள சல்மான்கானின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

பல்வேறு இன்னல்களை கடந்து 2000 கி.மீ தூரம் பயணம் செய்து வீடு திரும்பிய இளைஞர், இறுதியில் பாம்பு கடித்து உயிரிழந்துள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement