இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை மோடி அரசு சீர்குலைத்து வருகிறது

239

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை மக்கள் விரோத மோடி அரசு சீர்குலைத்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயளாலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69,1-ன் படி, விசாரணை மற்றும் உளவு அமைப்புகள் நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிப்புக்கு உட்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டைப் பாதுகாக்க விசாரணை அமைப்புகளுக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கி இருப்பதாகக் கூறுவது அக்கிரமத்தின் உச்சகட்டமாகும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை மக்கள் விரோத மோடி அரசு சீர்குலைத்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டம் அனுமதித்து இருக்கும் குடிமக்களுடைய அடிப்படை உரிமைகளைப் பறித்து, விசாரணை அமைப்புகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும், அரசியல் சாசன மரபுகளை ஆழக் குழிதோண்டிப் புதைத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தை சவக்குழியில் தள்ளி இருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.