காஷ்மீர் : ஜனநாயகப்படுகொலை…அவசரகால நிலை… – மாநிலங்களவையில் பொங்கிய வைகோ..

452

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்குவதற்கான மசோதா ஆகியவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் எதிர்த்துள்ளனர்.

சென்னையில் இது பற்றிப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை ஜனநாயகப் படுகொலை என்று வருணித்தார். “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்த மாநிலத்தில் உருவாகும் வரையில் குடியரசுத் தலைவரின் உத்தரவு நிறுத்திவைக்கப்படவேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக நான்கு மசோதாக்களை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அப்போது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவருமான குலாம் நபி ஆசாத் இதனை கடுமையாக எதிர்த்தார்.இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்நிலையில், மாநிலங்களவையில் பல கட்சி உறுப்பினர்களும் பாஜக முடிவை ஆதரித்துவந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்த முடிவை கடுமையாக எதிர்த்தார். காங்கிரஸ் அவ்வப்போது காங்கிரஸ் மாநில அரசைக் கலைத்தது குறித்தும் அவர் விமர்சித்தார்.

தாம் இன்னும் 10 -15 ஆண்டுகள்தான் வாழ முடியும் என்றாலும், தமது அடுத்த தலைமுறையினர் கூட இதை ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்தார் வைகோ.

“தெற்கு சூடான், கிழக்கு தைமூர் போல காஷ்மீர் ஆகும். அப்படி ஆகக்கூடாது என்பதே எங்கள் நிலை. இந்தியாவுக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். தலையிடுவதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது. தெற்கு சூடான், கிழக்கு தைமூர் போல இது ஆக்கப்படும். ஜனநாயகம் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றார்” என்றார் வைகோ.

அவையில் பேசிய அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

Advertisement