பயமுறுத்தும் ’வாயு புயல்’ இன்று கரையை கடக்கிறது

554

அரபிக்கடலில் மையம் கொண்ட ‘வாயு’ புயல், இன்று பிற்பகல் குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு வாயு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, குஜராத் மாநிலம் வெராவல் – துவாரகா இடையே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து குஜராத் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெராவல், தியு, துவாரகா உள்ளிட்ட இடங்களில், கடலோர பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அமெரெலி பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தேசிய பேரிடர் மீட்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர். தியு பகுதியில் முகாமிட்டுள்ள தேசிய மீட்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே புயல் எதிரொலியாக போர்பந்தர் சவுபதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அலைகள் நீண்ட உயரத்துக்கு எழுவதால் பொதுமக்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.முன்னதாக, அமெரெலி பகுதியில் நேற்று மாலை புழுதிப்புயல் வீசியது.

மேலும், போர்பந்தர், தியு, பாவ்நகர், கெசாத், கண்ட்லா ஆகிய விமான நிலையங்களில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 70 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் காந்திநகரில் முதல்வர் விஜய் ரூபானி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of