விஜய் படத்தின் ஷூட்டிங் மட்டுமே தமிழ்நாட்டில் நடக்கிறது – ஆர்.கே.செல்வமணி

575

வருமானவரித்துறையினர் நடத்திய சோதனைக்கு பிறகு, மீண்டும் மாஸ்டர் பட ஷீட்டிங்கில் நடிகர் விஜய் கலந்துக்கொண்டார். அப்போது அங்கு வந்த பாஜகவினர், இந்த இடத்தில் ஷீட்டிங் நடத்தக்கூடாது எனக்கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, விஜயின் ரசிகர்களும் அங்கு வந்து பாஜகவினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமானதையடுத்து, காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பெரிய ஹீரோக்களில் விஜய் படத்தின் ஷூட்டிங் மட்டுமே தமிழ்நாட்டில் நடக்கிறது என்றும், பிரச்சனை வரும் என்பதால் ரஜினி, அஜித் உள்ளிட்டோரின் ஷூட்டிங்கை வெளிமாநிலத்துக்கு மாற்றி விடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தாததால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வெளிமாநிலங்களுக்குச் சென்றுள்ளது என்று கூறிய அவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘அரவிந்தன்’ படப்பிடிப்பில் ஒருவர் காயமடைந்த விவகாரத்திற்கு இப்போது தகராறு செய்வது நியாயமில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜோசப் விஜய், இப்ராஹிம், செல்வமணி என யார் வேண்டுமானாலும் தமிழ் திரைப்படத் துறையில் வாழலாம். மற்ற மாநிலங்கள் திரைத்துறையை ஆதரிக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக திரைத் துறையை எதிரியாக பார்க்கிறார்கள் என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

Advertisement