தோனியின் சாதனையை முறியடித்த கோலி…!

832

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணி இடையேயான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் தோனியை பின்னுக்குத்தள்ளியுள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விஹாரி 111 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். விராட் கோலி 76 ரன்களும், மாயன்க் அகர்வால் 55 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பம் முதலே சறுக்கலாக அமைந்தது. முக்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மையர் 34 ரன்கள் அடித்தார். \

மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

பின்னர் 468 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 45 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் அந்த அணி 210 ரன்களுக்குள் ஆல்-அவுட்டானது.

இதன் மூலம் 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும் இஷாந்த சர்மா 2 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சதம் உட்பட மொத்தம் 164 ரன்கள் குவித்த விஹாரி ஆட்ட நாயகனாக தேர்வானார்.

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை ஈட்டித் தந்த கேப்டன்களில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 48 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இவர், 28-வது வெற்றியை ருசித்துள்ளார். 27 வெற்றிகளுடன் தோனி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டி-20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் என மூன்று தொடர்களையும் இந்தியா வென்று சாதித்துள்ளது

Advertisement