இந்தோனேஷியாவில் நிலநடுக்கம், சுனாமியை தொடர்ந்து எரிமலை வெடிப்பு

854

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

நிலநடுக்கத்தால் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பீதியில், வீடுகளுக்குள்ளும், பிற கட்டிடங்களுக்குள்ளும் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு, சாலைகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் ஓடினர். இருப்பினும் ஏராளமான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதனிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவில் சுனாமியும் தாக்கியது. இந்த மோசமான பேரழிவில் சிக்கி 832 பேர் பலியாகினர் என கடந்த ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளிவந்த நிலையில், நேற்று பலி எண்ணிக்கை 1234 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடம் மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சுலாவெசி மாகாணத்திலுள்ள சொபுதான் எரிமலையில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எரிமலை வெடிப்பினால் சுமார் 4000மீ உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனிடையே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சொபுதான் எரிமலையை சுற்றி 4 கி.மீ. தூரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு இந்தோனேஷிய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியின் கோரதாண்டவத்தில் சிக்கிய இந்தோனேஷிய மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு மீளாதுயரத்தை ஏற்படுத்தியுள்ளது.