தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடக்கம்

398

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

119 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் – தெலுங்கு தேச கூட்டணி மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு பா.ஜ.க, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு ​வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைந்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இரண்டு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுவதால் இன்று மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.