காதலியை திருமணம் செய்ய கடிகாரத்தை களவாடிய ”கன்னித் திருடன்”

602

வெங்கலப்பூட்டை உடைத்து விளக்குமாறு திருடிய கதை மூதாதையர்கள் சொல்லி கேள்வி பட்டிருப்போம். அப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பதை எங்கேயாவது பார்த்ததுண்டா? அப்படிப்பட்ட சம்பவம் தான் தற்பொழுது சென்னையில் அறங்கேறி இருக்கிறது.

சென்னையில் காதலித்த பெண்ணை மணக்க அதிக பணம் வேண்டும் என்று மாமனார் விதித்த நிபந்தனையை நிறைவேற்ற, திருடனாக மாறிய இளைஞர் ஒருவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விடிய விடிய போராடி பங்களா வீட்டிற்குள் புகுந்து ஒரே ஒரு சுவர் கடிகாரத்தை திருடி போலீசில் சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செளந்திரபாண்டியன் என்பவர், தனது வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை நீண்ட நேரம் போராடி உடைத்து, செல்லதுரையும், அவரது இரு கூட்டாளிகளும் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

அங்கிருந்த பீரோவை திறக்க முயன்றுள்ளார். பல மணி நேரமாக முயற்சித்தும் பீரோவை திறக்க இயலாததால் வீட்டில் இருந்த சுவர் கடிகாரம் ஒன்றையும், சிறிய எல்.ஈ.டி. டிவியையும் திருடிக் கொண்டு தப்பி உள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்திருப்பது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காரில் வந்த 3 பேர் கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதில் உள்ள காரின் பதிவு எண்ணை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செல்லதுரை, மைக்கேல் அந்தோணி, விக்னேஷ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் மூவரும் கன்னித் திருடர்கள் என்பது தெரியவந்தது,

கொள்ளையர்களில் ஒருவனான செல்லதுரை ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவன் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்ததால் தனது பெண்ணை திருமணம் செய்து தர 10 லட்சம் ரூபாய் பணத்துடன் வரவேண்டும் என்று பெண்ணின் தந்தை நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுகின்றது.

பெரிய பங்களா வீட்டில் திருடினால் உடனடியாக பணம் சம்பதிக்கலாம் என்று திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் இறங்கியுள்ளனர். அதன்படி சவுந்திர பாண்டியன் வீட்டின் பூடை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும்.

போதிய முன் அனுபவம் இல்லாததால் பீரோவை திறக்க இயலாமல் ஏமாற்றத்துடன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த 80 ரூபாய் கடிகாரத்தையும், சிறிய டிவியையும் தூக்கிச்சென்று 1000 ரூபாய்க்கு விற்று போலீசில் சிக்கி கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

விடிய விடிய போராடி வெண்கலப் பூட்டை உடைத்தாலும், விளக்குமாறுதான் கிடைக்கும் என்ற பழங்கதையாய் மாறி இருக்கின்றது காதல் திருடனின் கைவரிசை..!