பெரியாறு அணைக்கு மீண்டும் நீர்வரத்து

79

தேனி மாவட்டம், கூடலூர், லோயர்கேம்ப், குமுளி மற்றும் தேக்கடி ஏரிப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக மாலையில் மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்து வருகிறது.கடந்த 8ம் தேதி பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.10 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து நின்ற நிலையில், வினாடிக்கு 170 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து துவங்கியுள்ளது. 152 அடி உயரம் உள்ள பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 114.10 அடியாக இருந்தது. வரத்து வினாடிக்கு 160 கன அடி.

வெளியேற்றம் வினாடிக்கு 170 கன அடியாகும். அணையில் 1,576 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதேபோல் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நேற்றைய நீர்மட்டம் 45.49 அடி. நீர்வரத்து இல்லை.

அணையில் இருந்து மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 60 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 1,456 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.