தண்ணீர் பைப்பில் வராத தண்ணீர் சிக்னல் பைப்பில் பீரிட்டு அடித்த சம்பவம்…! – வைரலாகும் வீடியோ

474

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது கே.கே.பட்டி. இக்கிராமத்தில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் பிரதான சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு நாட்களுக்கு முன்னர் சோலார் சிக்னல் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த சிக்னல் பைப்பில் இருந்து நேற்று திடீரென தண்ணீர் கொட்டியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பலரும் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அருகில் இருந்த கடைக்காரர்கள் சிலர், அந்த தண்ணீரை பிடித்துச் சென்றனர். தொடர்ச்சியாக தண்ணீர் கொட்டியதால், அப்பகுதி சாலையில் தண்ணீர் வெள்ளமென பாய்ந்துகொண்டிருந்தது.

பின்னர் கம்பம் நகராட்சியில் இருந்து கே.கே.பட்டிக்கு செல்லும் தண்ணீர் பைப்பினை துளையிட்டு, சிக்னல் பைப் நடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு, சிக்னல் பைப் அகற்றப்பட்டு, தண்ணீர் பைப் சரி செய்யப்பட்டது.

இரண்டு நாட்களாக தண்ணீர் வினியோகம் இல்லாததால் பிரச்னை ஏதும் இன்றி சிக்னல் பைப் இருந்துள்ளது. தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் செல்வதால் கே.கே.பட்டிக்கு தண்ணீர் சப்ளை செய்துள்ளனர்.

அதன் பின்னரே நடந்த களேபரம் கண்களுக்கு தெரிந்துள்ளது. இச்சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of