“கேரளாவில் NRC, NPR -க்கு ஒத்துழைப்பு தரமுடியாது” – அமைச்சரவையில் அதிரடி முடிவு..!

1574

கேரளாவில் என்.ஆர்.சி, என்.பி.ஆர் கணக்கெடுப்பு நடத்த முடியாது, இதற்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று கேரள அமைச்சரவை அவசர கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தன்னிடம் ஆலோசிக்காமல் எப்படி வழக்கு தொடரலாம் என்று கேரள ஆளுநர் கண்டனம் தெரிவித்தார். அதை மாநில அரசு பொருட்படுத்தாத சூழலில், இன்று கேரள அமைச்சரவையின் அவசர கூட்டம் கூட்டப்பட்டது.

திருவனந்தபுரத்தில் நடந்த அந்த கூட்டத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு (என்.பி.ஆர்) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், “மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து பெற்றோர் பிறந்த தேதி, பதில் அளிப்போரின் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என்ற இடங்கள் நீக்கப்பட வேண்டும்” என்று முடிவெடுக்கப்பட்டது.

மேலும், கேரள மாநிலத்தில் என்.பி.ஆர், என்.ஆர்.சி-யை எக்காரணம் கொண்டும் அமல்படுத்த மாட்டோம். அதே நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement