பிரியங்கா கொலை : “என் மகனை எரித்துக்கொன்றாலும் கவலை இல்லை” – குற்றவாளியின் தாய் பேட்டி..!

5416

இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் தனது கணவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், தன் மகன் எரித்துக் கொல்லப்பட்டாலும் கவலை இல்லை என குற்றவாளிகளில் ஒருவரின் தாய் ஜெயம்மா வேதனையோடு தெரிவித்துள்ளார்.

பிரியங்கா கொலை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரியங்கா தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்தார்; அதில் அவர் கூறியதாவது;

பிரியங்கா, அவளது தங்கைக்கு போன் செய்த வி‌ஷயம் எனக்கு தெரியாது. வண்டி பஞ்சர் பற்றியும், அவளை 4 பேர் பின் தொடர்ந்து சென்றது பற்றியும் எனக்கு தெரியாது.

இரவு 10 மணிக்கு போன் ‘ரீச்’ ஆகவில்லை என்றதும் என் இளைய மகள் ஏர்போர்ட் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்த போலீசார் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை பார்த்துள்ளனர். அதில் கச்சி பவுலி நோக்கி என் மகள் சென்றது தெரிய வந்தது.

அதனால் போலீசார் எங்களை சம்ஷாபாத் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்குமாறு கூறி உள்ளனர். அவர்கள் எங்களிடம் விசாரணை நடத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

பிறகு சம்ஷாபாத் போலீஸ் நிலையம் சென்றோம். வெகுநேரம் கழித்து 2 போலீஸ்காரர்களை எங்களோடு அனுப்பி வைத்தனர். நாங்கள் என் மகள், வண்டியை தள்ளிக் கொண்டு வந்ததாக கூறிய இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்தோம். அதிகாலை 4 மணி வரை தேடியும் என் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

என் மகள் அப்பாவி. அவளை கொலை செய்தவர்களை எல்லோர் முன்பு வைத்து உயிரோடு எரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரியங்காவின் தங்கை பவ்யா கூறுகையில், “போலீஸ் நிலையங்களுக்கு மாறி, மாறி அலைந்ததிலேயே 3 மணி நேரம் வீணாகி விட்டது. போலீசார் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி இருந்தால் என் அக்காவை காப்பாற்றி இருக்கலாம்” என்றார்.

இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவனான சென்னகேசவலு தாய் ஜெயம்மா கூறும்போது, “மகன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதை அறிந்ததும், எனது கணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறோம். இந்த பாவச் செயலில் ஈடுபட்ட எனது மகனை எரித்து கொன்றால்கூட எனக்கு கவலை இல்லை. எங்களுக்கும் மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக வெளியில் சென்றுவர வேண்டும். மகனுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் கவலை கிடையாது” என்றார்.