“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..!

6439

கொரோனா என்ற அரக்கன், உலக மக்களின் உயிர்களை கொத்து கொத்தாக பறித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவனை அழிப்பதற்கு மருத்துவர்கள் எனும் சூப்பர் மேன்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுமட்டுமின்றி வரும் முன் காப்போம் நடவடிக்கையாகவும் பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்களும், அரசாங்கமும் பொதுமக்களுக்கு தினந்தோறும் கூறி வருகின்றனர். அதில், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பதும் ஒன்று.

ஆனால், நம்மில் பல பேர் சோப்பால் கைகளை கழுவி வைரசை அழிக்கிறோம் என்ற பெயரில், தண்ணீரை தான் வீணாக்கிக்கொண்டிருக்கிறோம். அடுத்து வர இருக்கும் காலங்கள் அனைத்தும் கோடைக்காலங்களாகவே உள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே தண்ணீர் சேமித்தல் குறித்து அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டியது இந்த சமயத்தில் அவசியமாக உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக, சோப்பு போட்டு கையை கழுவ விரும்புபவர்கள், முதலில் குழாயை திறந்து வைத்து விட்டு தங்களது கைகளை ஈரப்படுத்திக்கொள்ளுங்கள்.

அதன்பிறகு குழாயை மூடிவிட்டு, சோப்பால் இரண்டு கைகளையும் நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். பின்னர், மீண்டும் குழாயை திறந்து வைத்துவிட்டு கைகளை நீரில் கழுவிக்கொள்ளுங்கள்.

இதன்மூலம் தண்ணீர் பயன்பாட்டை குறைப்பதோடு, கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்தும் கொள்ளலாம். மேலும், சானிடைசர்கள் பயன்படுத்துவதன் மூலமும் தண்ணீர் பயன்பாட்டை குறைக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.