கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்

456

தூத்துக்குடி இனிகோநகர் கடற்கரையில் புதன்கிழமை இரவு பெண் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியது.

தகவலின்பேரில் வனத் துறையினர் சென்று மீனவர்களுடன் இணைந்து அதை மீட்டு கடலில் விட்டனர். இந்நிலையில் அந்தத் திமிங்கிலம் வியாழக்கிழமை காலை இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ஏறத்தாழ 60 அடி நீளம் வரை வளரும் இந்தத் திமிங்கிலம் அம்மனி உளுவை என அழைக்கப்படுவதுண்டு. கரை ஒதுங்கிய திமிங்கிலம் 5.47 மீட்டர் நீளமும் ஏறத்தாழ ஒன்றரை டன் எடையும் உள்ளது என்றனர்.

இத்திமிங்கிலத்தை கால்நடை மருத்துவர்கள், சந்தோஷ் முத்துகுமார், ஜோல்ராஜ், அபிராமி ஆகியோர் கொண்ட குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் கடற்கரை மணலில் திமிங்கிலம் புதைக்கப்பட்டது. அதன் உடலில் காயங்கள் இருந்ததால் ஏதேனும் கப்பலில் சிக்கி அடிபட்டிருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement