நெருப்பு வளைய சூரிய கிரகணம்..! எளிமையான விளக்கம் இதோ..!

1919

டிசம்பர் 26-ம் தேதி, வியாழக்கிழமை காலை ஏற்படும் சூரிய கிரகணம், அபூர்வமான கிரகணங்களில் ஒன்று. இருண்ட வானத்தில், வைர வளையலை மிதக்கவிட்டால் எப்படி இருக்குமோ, அப்படியொரு காட்சியைதான், வானில் நாம் அனைவரும் பார்க்க இருக்கிறோம்.

அதுவும் மற்ற இடங்களை விட ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம், திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் சில நிமிடங்களுக்கு இந்த அரிய நிகழ்வு நன்றாகவே தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாம்பு கிரகங்களான ராகுவும் கேதுவும் சூரியனை விழுங்கி, புதிய சூரியன் உதயமாகும் என சில ஜோதிடர்கள் கூறினாலும், விஞ்ஞான ரீதியாக ராகுவும் கேதுவும் கற்பனைப் புள்ளிகள் என்பதுதான் விஞ்ஞானிகள் கூற்று. சூரியனை பூமியும், பூமியை சந்திரனும் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

இந்த சுற்றலின்போது, பூமிக்கு அருகே சூரியன் வரும் போதுதான், இந்த சூரிய கிரகணம் நிகழ்கிறது. பூமிக்கு அருகில் இருப்பதால், சூரியன் மிகப்பெரியதாக தோன்றும். இப்படி தோன்றும் போது, சூரியனுக்கும்பூமிக்கும் இடையில், சந்திரன் என்றழைக்கப்படும் நிலா வரும் போது, சூரியன் மறைக்கப்படும்.

சில மணித்துளிகள் நிலாவைவிட சுமார் 400 மடங்கு பெரியதாக இருக்கும் சூரியனை சந்திரன் மறைக்கும் இந்த நிகழ்வுதான் சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இந்த முறை சூரியன், பூமிக்கு அருகே வரும் போது, நிலா மறைக்கிறது. மறைக்கும் போது, சூரியனின் மையமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மறைந்துவிடும்.

ஆனால், மறையாத சூரியனின் விளிம்பு பகுதிகள், நெருப்பு வளையம் போல் நிலாவை சுற்றி இருக்கும். இதுதான் நெருப்பு வளையல் சூரிய கிரகணம் எனப்படுகிறது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், இருண்ட வானில், சூரியனின் மையத்தில் பொட்டு வைத்தது போல், சந்திரனின் கருமைப்பகுதி இருக்கும்.

மறையாத சூரியனின் விளிம்பு பகுதிகள் சந்திரனை சுற்றி, வட்ட வடிவில், வளையல் போல் ஜொலிக்கும். இதுதான் நெருப்பு வளையல் சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வு, காலையில் கிழக்கு திசையில் உதயமான பிறகு, சூரியனுக்கு மேற்கு திசைப்பகுதியை முதலில், நிலா மறைக்கத் தொடங்கும். அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக சூரிய பிம்பம் மறைந்துக் கொண்டே வந்து, காலை 11.16 மணிக்குப் பிறகு, மீண்டும் சூரியன் முழுமையாக தெரிய ஆரம்பிக்கும்.

இந்த நெருப்பு வளையல் காட்சி, 10 மணியளவில் 2 முதல் 5 நிமிடம் வரை தெரியும் எனக் கூறப்படுகிறது. பொதுவாக சூரியனை நாம் யாரும் வெறும் கண்களில் பார்ப்பதில்லை.. அதுவும் சூரியன், பூமிக்கு நெருக்கமாக வரும் போது, சூரியனின் கதிர்கள் வெறும் கண்களால் பார்க்கும்போது பாதிப்பைத் தரலாம்.

 

எனவேதான், சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்றும் தொலைநோக்கிகள் போன்ற பாதுகாப்புகளுடன் காண வேண்டும் என்றும் கூறப்படுகிறது. நமது சத்தியம் டிவியிலும் இந்த அரிய நிகழ்வின் காட்சிகளை நேயர்கள் பார்த்து ரசிக்கலாம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of