ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன – உயர்நீதிமன்றம் கேள்வி

700

ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அவரை அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் கடந்த ஆகஸ்ட் 31ல் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சவ்ஜன்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத்  தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, ரேசன் அரிசி ஏழைகளுக்கு வழங்கப்படுவது, அதை கடத்தி விற்பனை செய்வது மன்னிக்க முடியாத செயல் என குற்றம் சாட்டியது.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ரேசன் அரிசி கடத்தலால் அரசு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?, கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பியது.

மேலும் ரேசன் அரிசி திருட்டு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து ஆண்டு வாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை  அக்டோபர் 22 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement