கள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..? முழுவிவரம் இதோ..!

2066

ஒரு நாட்டின் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தினால் அந்நாட்டால், சில மாதங்களில் மீண்டு விட முடியும். ஆனால், பொருளாதார தாக்குதல்களில் இருந்து அவ்வளவு எளிதில் எந்த நாட்டாலும் மீண்டு வரமுடியாது. பொருளாதார தாக்குதல்களில், கள்ளநோட்டு அச்சடிப்பதும் ஒரு முறை. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..

ஒவ்வொரு நாட்டிற்கும், மத்திய வங்கி ஒன்று இருக்கும். அந்த வங்கி தான், அந்நாட்டிற்கான பணத்தை அச்சடிக்கின்றன. அந்த வங்கி தான், நாட்டில் இருக்கும், பணப்புழக்கத்தின் அளவையும் கண்காணிக்கும்.

இந்தியாவில் அந்த வங்கி, ஆர்.பி.ஐ என்று அழைக்கப்படுகிறது. இந்த ரிசர்வ் வங்கி,  நாட்டின் மொத்த உற்பத்தி அளவை பொறுத்து, பணத்தை அச்சடிக்கின்றன. அதாவது நாட்டில் உள்ள உற்பத்திப்பொருட்களின்  அளவைப்பொறுத்து, அதற்கேற்றவாறு பணத்தை அச்சிடுகின்றன.

நாட்டின் ஜிடிபி என்றழைக்கப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்புக்கு ஏற்றவாறு ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்கிறது. தொழில்-வர்த்தகம், விவசாய விளைபொருட்களின் உற்பத்தி, ஆகியவற்றைக்கணக்கில் கொண்டே நாட்டின் கரன்ஸி மதிப்பு முடிவு செய்யப்படுகிறது.

இதற்கு காரணம், அளவுக்கு அதிகமாக ரூபாய் நோட்டுகளை  அச்சடிக்கும் போது, பணப்புழக்கம் அதிகரித்து, ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு மட்டும் உற்பத்திப்பொருட்கள்  போய் சேரும் நிலை ஏற்படும். இதனாலே, உற்பத்தியின் அளவிற்கு ஏற்றவாறு, ஆர்.பி.ஐ பணத்தை அச்சடிக்கிறது. இதே விளைவை தான் கள்ளநோட்டுகளும் ஏற்படுத்துகின்றன.

இன்னும் விளக்கமாக சொன்னால், ஒரு ஊரில், ராமு மற்றும் சோமு என்ற இரண்டு பேர் மட்டும் உள்ளனர். அதே ஊரில் ஒரு கடை இருக்கிறது. அந்த கடையில் ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கான பண்டங்கள் மட்டுமே விற்கப்படும். மேலும், ராமு சோமு ஆகிய இருவரிடமும் சேர்த்து, நாள் ஒன்றிற்கு ரூ.100 தான் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம்.

அவர்கள் நாள்தோறும், அந்த கடையில் தங்களுக்கு தேவையான பொருட்களை தங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்ப வாங்கி வருகின்றனர். இவ்வாறு இருக்க ஒரு நாள் ராமு, 100 ரூபாய் கள்ள நோட்டை அச்சடித்து, அந்த கடையில் இருக்கும் மொத்த சரக்கையும் வாங்கி விடுகிறார்.

பின்னர், சோமு சரக்கு வாங்க அந்த கடைக்கு செல்லும்போது, எந்த சரக்கும் இருக்காது. இறுதியில் அவரிடம் வெறும் காசு மட்டும் தான் இருக்கும். இந்த சூழல் தான் கள்ள நோட்டு அச்சடிக்கும்போது ஏற்படுகிறது. இதனால் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.

இந்த கள்ளநோட்டுகள் சில சமயங்களில், நாட்டில் இருக்கும் சமூக விரோதிகளாலும், சில சமயங்களில், தீவிரவாதிகளாலும், திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இன்னும் எளிமையாக கூறுவோமேயானால், ஒருவர், இன்னொருவருக்கு சேர வேண்டிய உற்பத்தி பொருளை, கள்ள நோட்டை பயன்படுத்தி மறைமுகமாக எடுத்துக்கொள்கிறார். இது தான் கள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் மிகமுக்கிய பிரச்சனை.

– மா.கார்த்திக்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of