வந்துவிட்டது வாட்ஸ்-அப் Finger Print..! – இன்னும் பல அசத்தல் அப்டேட்களில் வாட்ஸ்-அப்..!

1466

ஸ்மார்ட்போன், உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிட்டது என்றால், உரையாடல்களை விரல் நுனியில் சுருக்கிவிட்டது வாட்ஸ் அப்.

உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களைக் குறிவைத்து அவர்களின் வாட்ஸ்அப் கணக்கை இஸ்ரேல் நிறுவனம் ஊடுருவியதை வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் உறுதி செய்தது.

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov)கூட தன் பதிவு ஒன்றில்,“10 வருட வரலாற்றில் ஒருநாள்கூட வாட்ஸ்அப் பாதுகாப்பானதாக இருந்தது கிடையாது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு பிரியர்கள் பலரும் விரல்மேல் போன் வைத்து காத்திருந்த அப்டேட், வாட்ஸ்அப் தரப்பிலிருந்து கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. ஐபோன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த கைரேகைப் பாதுகாப்பை (Fingerprint lock) ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப்.

இதன் மூலம் முன்றாம் தரப்பு பாதுகாப்புச் செயலிகளைப் பயன்படுத்துவதும் அதனால் தகவல் பறிபோகும் ஆபத்தும் குறையும் என்று வாட்ஸ்அப் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சேவையைப் பயன்படுத்த புதிய வாட்ஸ்அப் பதிவை அப்டேட் செய்தல் அவசியம். அதைத் தொடர்ந்து Settings –> Account –> Privacy –> Fingerprint Lock –> Unlock with fingerprint என்ற வழிமுறைகளை பின்பற்றினால் நாம் மொபைலில் பதிவு செய்துள்ள கைரேகையுடன் வாட்ஸ்அப் செயலி ஒன்றிணைந்து விடும்.

செயலியைவிட்டு வெளிவந்த மறுகணமே லாக் ஆகும்படியும் 1 நிமிடம், 30 நிமிடம் கழித்து லாக் ஆகும்படியும் விருப்பத் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எனினும் வாட்ஸ்அப் வாய்ஸ் அழைப்புகளையும் வீடியோ அழைப்புகளையும் பூட்டிய நிலையிலேயே பேசலாம். ஐபோனின் புதிய அப்டேட்களில் ஃபேஸ் ஐடி (Face ID) கொடுக்கப்பட்டதை அடுத்து, ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்தப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு டார்க் மோட் (Dark mode) சேவையும் புதிய அப்டேட்டில் கொடுத்ததோடு, கூடிய விரைவில் அனைவருக்கும் இந்தச் சேவை நீட்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இது வாட்ஸ்அப் குறித்த சமீபகால சர்ச்சைக்கு சிறியதொரு முற்றுப்புள்ளியாக இருக்கலாம்.