வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமனம்

373

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்-அப்’ செயலியை கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 130 கோடி வாட்ஸ் – அப் வாடிக்கையாளர்களில் சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர்.

இவ்வாறு மிகப்பெரிய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் என்பவரைவாட்ஸ்-அப் நிறுவனம் நியமித்து இருக்கிறது.

பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைசெயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

போலி செய்திகள் வேகமாக பரவுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக வாட்ஸ்-அப் நிறுவனம் மீது இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், இந்த தலைவர் நியமனம் நடந்திருக்கிறது.

முன்னதாக குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் அதிகாரி ஒருவரை வாட்ஸ்-அப் நிறுவனம் சமீபத்தில் நியமித்தது குறிப்பிடத்தக்கது.