முகிலன் எங்கே! மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்!

5313

கடந்த பிப்ரவரி 15 ம் தேதி சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளருமான முகிலன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிட்டார். அன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த அவரை அதன் பின்னர் காணவில்லை.

துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய காவல் துறையினரை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அந்தக் காணொளியில் இருக்கும் நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் புகார் அளித்தனர்.

இந்தப் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் ஆகியோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முகிலன் குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கும் முதல்வர் பழனிசாமி, ‘அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் ‘தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டக் கூடாது’ என்றும் பேசியிருந்தது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு ஸ்விட்சர்லாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

மேலும் முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலை ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்றும் அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of