தமிழ் பேசும் உரிமையை பெற்றுத் தந்தது யார் ?

694

மக்களவை பதவியேற்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 17 – வது மக்களவையில் தமிழக எம்.பிக்கள் பதவியேற்கும்போது, தமிழ்வாழ்க, தமிழ்வாழ்க என்று முழக்கமிட்டது உலக அளவில் டிரெண்டிங் ஆனது.ஒட்டுமொத்த தேசத்தின் எம்.பிக்களும் தமிழக எம்பிக்களின் மொழிஉணர்வைக்கண்டு அதிசயித்துப் பார்த்தனர்.

ஆனால், இன்றைய இளந்தலைமுறையினருக்கு நாடாளுமன்றத்தில் தமிழில் பேச, உரிமை கிடைத்தது சாதாரணமான நிகழ்வு அல்ல அது ஓர் உரிமைப்போராட்டவரலாறு.

நாடாளுமன்றத்தில் மாநில மொழியில் பேசுவதற்கு உரிமையைப்பெற்றுத்தந்தது தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இலக்கியச்செல்வர் குமரி அனந்தன் என்பதுதான் வரலாற்று உண்மை.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1977 ஆம் ஆண்டு, நாகர்கோயில் தொகுதி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தன், அவரது பதவிக்காலம் முழுவதும் தமிழிலேயே கேள்விகளை எழுப்பி, தமிழிலேயே பதிலையும் பெற்றார். அதற்காக அவர் சந்தித்த அவமானங்கள், போராட்டங்களை அவரே நினைவு கூர்ந்துள்ளார். அதன்படி, 1977 ஆம்ஆண்டில் முதன்முதலாக மக்களவையில் குமரி அனந்தன் பேச எழுந்து தமிழில் பேசத்தொடங்கியவுடன் உட்கார்.. உட்கார்… என்று வடமாநில எம்பிக்கள் முழக்கமிட்டு அவரை பேசவிடாமல் செய்திருக்கிறார்கள்.

அவைக்காவலர்களால் அவையில் இருந்து, வெளியேயும் தூக்கியெறியப்பட்டிருக்கிறார் குமரி அனந்தன்.ஆனால், தொடர் அவமானங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து தமிழிலேயே பேசியதால், ஓராண்டுகால அவமரியாதை, சட்டப்போராட்டங்களுக்குப்பிறகு 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம்தேதி தமிழில் பேச முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டது.

இதன்பின்னர், குமரி அனந்தன் அவைக்குள் நுழைகிறார் என்றால் மொழிபெயர்ப்பாளர்கள், இந்தி – ஆங்கில மொழிகளில் புலமைபெற்றவர்கள், குமரி்அனந்தனின் பின்னே ஓடி வருவார்களாம். இதன்பின்னர், ஐந்தாண்டுகாலமும் மக்களவையில் தமிழில் மட்டுமே பேசி, தமிழிலேயே பதில் பெற்று, நாடாளுமன்றத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியின் உரிமையை நிலை நாட்டியிருக்கிறார் குமரி அனந்தன்.

இதைக்கண்டு வியந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியை குமரி அனந்தன், மாற்றியமைத்துவிட்டார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் தமி்ழ் வாழ்க என்ற முழக்கம் இன்று ஓங்கி ஒலிப்பதன் பின்னணியில் குமரிஅனந்தனை பாராட்டுவோம்….