டில்லியில் அடுத்த ராஜா யார்..?

232

டில்லியில் நடக்கும் தேர்தலில் காங்., – பா.ஜ., இடையே பொதுவாக போட்டி இருக்கும். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இதில் சேர்ந்து உள்ளது.ஆம் ஆத்மி கட்சி டில்லி தேர்தல் களத்தில் குதித்த பின் காங்., – பா.ஜ., கட்சிகளின் செல்வாக்கு சுருங்கி விட்டது என்றே சொல்லலாம். டில்லி முதல்வராக கெஜ்ரிவால் உள்ளார்.கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் ஏழு தொகுதிகளையும் காங்., வென்றது.

ஐந்தாண்டுகளுக்கு பின் 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி அலையால் பா.ஜ., ஏழு இடங்களையும் கைப்பற்றியது. அந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு, 46.63 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இந்த முறை டில்லியில் மோடி அலை காணப்படவில்லை.

எனவே, 2014 தேர்தலை போல இம்முறை மொத்த தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றுவது சிரமமாகவே இருக்கும் என, கூறப்படுகிறது. பா.ஜ., எடுத்த உள்ளார்ந்த கணக்கீட்டின்படி டில்லியில் உள்ள தற்போதைய பா.ஜ., – எம்.பி.,க்கள் யாரும் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழவில்லை.

காங்., – ஆம் ஆத்மி இடையே கூட்டணி அமையாதது. பா.ஜ.,வின் வெற்றி நம்பிக்கையை அதிகரித்துள்ளது. காங்., – ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டு சேர்ந்தால் பா.ஜ.,வை எளிதில் தோற்கடிக்க முடியும்.

கடந்த, 2014 தேர்தலில், ஆம் ஆத்மி, 33.08 சதவீத ஓட்டுகளை பெற்றது. இம்முறை குறைந்த பட்சம் ஐந்து தொகுதிகளையாவது கைப்பற்றும் நம்பிக்கையுடன் களத்தில் குதித்துள்ளது.அந்த தேர்தலில், 15.22 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்ற காங்., இந்த முறை அதிக ஓட்டுகளை பெற்று வெற்றி பெறும் நோக்கில் தீவிரம் காட்டி வருகிறது.

அதுபோல, இந்த தேர்தல், ஷீலா தீட்சித்திற்கு, அரசியல் களத்தில், வாழ்வா, சாவா போராட்டமாக உள்ளது.டில்லி மாநில பா.ஜ., தலைவரான மனோஜ் திவாரி பீஹாரை சேர்ந்தவர். இவர், காங்., – ஆம் ஆத்மி தொண்டர்களை பா.ஜ., பக்கம் ஈர்க்கும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறார்.

தேசிய பாதுகாப்பு விவகாரத்தை முன்வைத்து, பா.ஜ., தலைவர்கள் டில்லியில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மூன்று கட்சிகள் இடையில் போட்டி நிகழும் தற்போதைய தேர்தலில், பா.ஜ., முன்னிலை வகிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
டில்லியில் 2015 சட்டசபைத் தேர்தலில் காங்., படுதோல்வி அடைந்தது.

அதற்கு பின்  காங்., தலைவராக நியமிக்கப்பட்ட, அஜய் மாக்கன் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வேண்டாம் என திட்டவட்டமாக வலியுறுத்தினார். மக்கள் மத்தியில் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு சரிந்து வருவதாக அவர் கூறினார்.ஆம் ஆத்மி – காங். இடையே கூட்டணி ஏற்படாததற்கு அஜய் மாக்கன் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.

டில்லியில் லோக்சபா தேர்தல் நடக்க, இரு மாதங்கள் உள்ள நிலையில் அதற்குள் ஆம் ஆத்மியுடன் காங்., கூட்டணி அமைக்குமா என்பதற்கு காலமே பதில் கூற வேண்டும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of