சென்னை மாநகராட்சியின் 1000 கோடி ஊழலுக்கு யார் காரணம்? தலைமைப் பொறியாளர் நந்தகுமாரா?

1172

சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டுமானத் திட்டப்பணிகளில் நடந்த முறைகேட்டால் 1000 கோடி ரூபாய் அளவிற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதென்ற விஷயத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது அறப்போர் இயக்கம்.

2017 ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் கடுமையான மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், ஒரு கன அடி மணலின் விலை 120 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது.

அப்போது, சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற கான்கிரீட் சாலைகள், மழை நீர் கால்வாய் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் போன்ற அனைத்து கட்டுமானங்களிலும் மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எம்.சாண்ட் பயன்பாட்டில் தான் மிகப்பெரும் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சுமத்தியிருக்கிறது.

அதாவது, ஆற்று மணலுக்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களோடு, ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஆனால் அவர்கள் கட்டுமானங்களில் எம்.சாண்ட் கான்க்ரீட்டை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.

 

இருந்தபோதும், ஒப்பந்ததாரர்களுக்கு, மணல் பயன்படுத்தி கான்க்ரீட் போட்டதாக பொய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதை சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் திட்டப்பணிகளில் எம்.சாண்ட் பயன்படுத்தியே திட்டப்பணிகள் மேற்கொண்டதை ஒப்புக்கொள்வதாக கூறுகிறார் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெய்ராம் வெங்கடேஷ்.

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெய்ராம் வெங்கடேஷ்

5500 ரூபாய்க்கு சந்தையில் கிடைக்கும் ரெடிமிக்ஸ் கான்க்ரீட்டை 9000 முதல் 12 ஆயிரம் ருபாய் வரை கூடுதல் விலை கொடுத்து ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு 1000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறும், அறப்போர் இயக்கம் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லவுள்ளது.

இந்த விவகாரத்தை நாம் விரிவாக விசாரிக்கையில், சென்னை மாநகராட்சியின் இந்த இழப்பிற்கு முக்கிய காரணமாக தற்போது தலைமை பொறியாளராக இருக்கும் நந்தகுமாரை நோக்கி கரங்கள் நீள்கிறது.

தலைமைப் பொறியாளர் நந்தகுமார்

சிறப்பு திட்டங்கள், மழைநீர்வடிகால் துறை, பேருந்து சாலைகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு முன்பு கண்காணிப்பு பொறியாளராக இருந்த நந்தகுமார் தான், தற்போது தலைமை பொறியாளராக இருக்கிறார்.

அதனால், கட்டுமானங்களில் எம்.சாண்ட் தான் பயன்படுத்தப்பட்டது என நன்கு தெரிந்தும் மணலுக்கு உரிய விலை கொடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக சந்தை விலையைவிட கூடுதல் விலையை ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்திருப்பதால் தலைமை பொறியாளர் நந்தகுமாரே முக்கிய பொறுப்பு எனக்கூறிய ஜெய்ராம் வெங்கடேஷ், அவரது சொத்து விவரங்கள் குறித்து லஞ்சஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்தவேண்டுமெனக் கூறி முடித்துக்கொண்டார்.

பெயர் சொல்ல விரும்பாத சென்னை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பேசினோம், தயங்கிக்கொண்டே பேசிய அவர்,

அறப்போர் இயக்கம் எழுப்பியுள்ள குற்றச்சாட்டில் உண்மையாக விசாரிக்கப்படவேண்டியவர் தலைமைப் பொறியாளர் நந்தகுமார் மட்டுமே என்றார். திட்டம் தொடர்பான ஒப்பந்தப்பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை சோதனை செய்ய வேண்டியது கண்காணிப்பொறியாளரின் கடமை சார். ஆனால் அதை செய்யாமல் பயன்படுத்தாத பொருளுக்கு பணம் கொடுத்திருக்கிறார்.

சும்மாவா சார் இதையெல்லாம் ஒரு அதிகாரி செய்வார் என நம்மிடமே திரும்பிக்கேட்கிறார்.

தலைமைப் பொறியாளர் நந்தகுமார் தனக்கு வேண்டியர்களுக்கு மட்டுமே திரும்பத்திரும்ப ஒப்பந்தம் கொடுத்திருப்பதாகவும், அந்த ஒப்பந்ததாரர்களும் அவருடைய பினாமிகள் என்றே சென்னை மாநகராட்சி வட்டாரம் பேசிக்கொள்கிறது.

விரைவில் அந்த விபரங்களும் வெளிவரும் என்கிறது அதிகாரிகள் தரப்பு..

கண்டுகொள்ளவும் ஆளில்லை, கண்டிக்கவும் ஆளில்லை..

எல்லாம் காசு.. சார்.. காசு…