சிதம்பரம் தொகுதி யாருக்கு? – வலுப்பெறுகிறதா விசிக? – சிறப்பு தொகுப்பு

2143

சிதம்பரம் தொகுதியில் அதிமுகவும், விடுதலை சிறுத்தை கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
சென்னை: இப்போதைக்கு சிதம்பரம் தொகுதியை பொறுத்த மட்டில் வெற்றி-தோல்வி என உறுதியாக கணிக்க முடியவில்லை!

சிதம்பரம் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 26ஆயிரத்து 828.

இதில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 

அதிமுக சார்பில் போட்டியிட்ட மா.சந்திரகாசி 4,29,536 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

விசிக சார்பில் போட்டியிட்ட தொல்.திருமாவளவன் 3,01,041 வாக்குகள் பெற்று 1 இலட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பா.ம.க. சார்பில் போட்டியிட்ட சுதா பெற்ற வாக்குகள் 2,79,016 

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வள்ளல் பெருமான் 28,988

1952-ம் ஆண்டு முதல் 16 முறை இந்த தொகுதியில் தேர்தல் நடந்துள்ளது. 6 முறை காங்கிரஸ், 4 முறை திமுகவும், 3 முறை பாமகவும், 2முறை அதிமுகவும் ஒருமுறை விசிகவும் வெற்றி பெற்றுள்ளன.

இங்கு திமுக, அதிமுகவுக்கு அதிகமாக வாக்கு வாங்கி உள்ளது. இதை தவிர பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது.

ஆனால் இந்த தொகுதியில்தான் போட்டியிட போகிறேன், வேட்பாளராக நானே களம் இறங்க போகிறேன் என்று திருமாவளவன் போன வருஷமே சொல்லி விட்டார். இதனால் சிதம்பரம் தொகுதி கேட்டு திமுகவை நெருக்கியும் வந்தார்.

பாமக திமுக கூட்டணிக்கு வந்துவிடுமோ என்ற குழப்பத்திலேயே நாட்கள் பறந்தன. அப்படி பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறும் என்று அறிவிக்கும் நிலையும் ஏற்பட்டது.

இதையடுத்து, சீட் விவகாரம் இழுபறியாய் நடந்து முடிய.. பிறகு சின்னம் விவகாரம் தலைதூக்கியது. இப்போதும் சின்னமும் ஒரு முடிவுக்கு வந்ததையடுத்து சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

இதே தொகுதியில் இதுவரை 5-வது முறையாக இவர் களம் இறங்குகிறார். இதற்கு காரணம், இவரது சொந்த ஊர் இந்த தொகுதியில்தான் வருகிறது என்று சொல்லப்படுகிறது.

மேலும் இங்கு பெரும்பாலும் வன்னியர்கள், தலித், இஸ்லாமியர்கள், சமூகம் உள்ளன. இதனால் சமூக ரீதியான ஓட்டுக்கள் கிடைக்கும் என்பது திருமாவளவனுக்கு சாதகமாக உள்ளது.

அதுவும் இல்லாமல், தற்போதைய அதிமுக எம்பி இந்த தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் திருமாவுக்கு பிளஸ் பாயிண்ட்தான். இது எல்லாவற்றிற்கும் மேலாக காடுவெட்டி குருவின் சொந்த ஊர் இந்த தொகுதிக்குள் வரும் என தெரிகிறது. அதனால் பாமகவின் அதிருப்தி ஓட்டுக்கள் முழுக்க திருமாவுக்கு சாதகமாகும்.

மேலும் திமுகவுக்கு வேல்முருகனின் முழு சப்போர்ட் இருப்பதால், வன்னியர் வாக்குகளை அப்படியே அள்ளிவிடக்கூடும்.

ஆனால் திருமாவளவன் மேல் தொகுதியில் நிலவும் ஒரே அதிருப்தி என்னவென்றால், முன்பு இதே தொகுதியில் ஜெயித்தபோது, திரும்பவும் இந்த தொகுதி பக்கம் சரியாக வரவில்லை என்பதே!

காடுவெட்டி குரு இல்லாததால், சிதம்பரம் தொகுதியில் பாமக போட்டியிட தயங்குவதாக சமீபத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டது.

ஆனால், இப்போது குருவின் ஆதரவாளர்களே பாமகவுக்கு எதிராக திரும்பி இருப்பதால் அங்கு போட்டியிட பாமக விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதனால்தான் அதிமுகவே நேரடியாக இங்கு களம் காணுகிறது.

அதிமுக சார்பில் சந்திரசேகர் என்பவர் வேட்பாளராக களம் காணுகிறார். இவர் ஒரு புது வேட்பாளர். சாதாரண கவுன்சிலராக இருந்தாலும் பண பலம் எக்கச்சக்கமாக இருக்கிறதாம். அதனால்தான் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இருந்தாலும் இவரது பிரச்சாரம் எப்படி இருக்கும் என தெரியவில்லை. வெறும் கூட்டணி பலம், பண பலத்தை நம்பியே களம் இறங்குகிறார். கண்டிப்பாக, அதிமுக, பாமக தொண்டர்களின் ஒத்துழைப்பு இவருக்கு நிறையவே கிடைக்கும் என தெரிகிறது.

ஆனால் அதிமுக வின் அதிருப்தி வாக்குகள் திருமாவளவனுக்கு சாதகமாக அமையும் என தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் சென்ற முறை தனித்து நின்ற காங்கிரஸ் கட்சியும் இம்முறை திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது.

ஆனால் திருமாவளவனை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் அளவுக்கு தொகுதியில் “தாராளத்தை” காட்டுவாரா என தெரியவில்லை.

இப்போதைய நிலையில், இரு கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், பிரச்சார யுக்தி, மக்களிடம் அணுகும்முறை இதையெல்லாம் பொறுத்தேதான் வெற்றி தோல்வி அமையும் என தெரிகிறது.

Advertisement