பாஜக தமிழகத்தில் தோல்வியடைந்தது ஏன்? – விளக்கம் கேட்டு நோட்டீஸ்

802

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று விளக்கம் கேட்டு தமிழக பா.ஜனதாவுக்கு மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிட்டது. இந்த தொகுதிகளில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த 5 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைத் தழுவியது. பா.ஜனதா மூத்த தலைவர்கள் 5 பேரும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டனர். இது தமிழக பா.ஜனதா தலைவர்களிடம் மட்டுமின்றி தேசிய பா.ஜனதா தலைவர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் மோடி அரசுக்கு எதிரான அலை வீசியதால்தான் பெரிய தோல்வியை சந்திக்க நேரிட்டது என்று பொதுவான காரணம் கூறப்படுகிறது.

என்றாலும் தமிழக பா.ஜனதாவுக்கு வாக்கு சதவீதம் இந்த தடவை குறைந்து போனதை மேலிடத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு சரி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

வாஜ்பாய் காலத்தில் அதாவது 1999-ம் ஆண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 7.1 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. அதன் பிறகு அந்த அளவுக்கு வாக்குகளை தமிழக பாரதிய ஜனதா பெறவில்லை. 2009-ம் ஆண்டு 2.3 சதவீதம் 2014-ம் ஆண்டு 5.6 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

தற்போது 2019-ல் அது 3.7 சதவீதம் வாக்குகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாரதிய ஜனதா சுமார் 2 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளது.

தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக சதவீத வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா கடும் அதிருப்தி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அமித் ஷா அலுவலகம் நேற்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையை தொடர்பு கொண்டு பேசியது.

அப்போது, “தமிழ்நாட்டில் பா.ஜனதா தோல்வி அடைந்தது ஏன்?” என்று விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழிசையிடம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பா.ஜனதா ஆதரவாளர்கள் பலரிடமும் அமித் ஷா அலுவலகம் அறிக்கை தயார் செய்து தரும்படி கேட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழக பா.ஜனதாவில் மாற்றங்களை கொண்டு வர அமித் ஷா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் இந்த தடவை 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று மோடியும், அமித் ஷாவும் இலக்கு வைத்திருந்தனர். அதை கருத்தில் கொண்டே அவர்கள் காஞ்சிபுரம், திருப்பூர், மதுரை, கன்னியாகுமரி, தேனி, ஈரோடு நகரங்களில் நடந்த பிரமாண்ட கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்கள். ஆனாலும் தோல்வி ஏற்பட்டது ஏன்? என்பது புரியாமல் பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே தமிழ் நாட்டில் பா.ஜனதா தோல்வி அடைய என்ன காரணம் என்று மேலிடத்துக்கு ஒரு அறிக்கை அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அந்த விளக்கத்தில், “தமிழக பா.ஜனதா தலைவர்கள் சிறப்பாக தேர்தல் பணியாற்றவில்லை” என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இதை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், “தேர்தல் முடிவுகள் வெளியானதும், பா.ஜனதா மூத்த தலைவர் ராம்லால் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

தேர்தல் தோல்விக்காக கவலைப்பட வேண்டாம் என்றார். நாங்கள் மேற்கொண்ட தேர்தல் பணிகளை பாராட்டினார்” என்றார்.

தமிழக பா.ஜனதா மீது மேலிட தலைவர்கள் கோபமாக இருப்பதாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார். இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

பத்திரிகையில் பல தகவல்கள் வருகிறது. இதில் எந்த தகவலுமே உண்மை இல்லை. அதை மோடியே சொல்லி விட்டார். அதனால் என்னைப் பொறுத்தமட்டில் கட்சி எங்களோடு இருக்கிறது.

தமிழக பா.ஜனதா மீது பா.ஜனதா தலைமை கோபமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை. எங்கள் கட்சிக்கு எங்களை பற்றியும் தெரியும். தமிழகத்தில் இருந்த களத்தை பற்றியும் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of