நாளை ஒரு மாவட்டத்திற்கு மட்டும் முதல்வர் செல்வது ஏன்?

799

பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் முதலமைச்சர் பழனிசாமி நாளை ராமநாதபுரம் மட்டும் செல்கிறார்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்டம் வாரியாக சென்று முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார்.

இதுவரை, கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று அவர் ஆய்வு நடத்தியுள்ளார்.

இந்தநிலையில், நாளை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும், 23-ந்தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கும் செல்ல முதலமைச்சர் பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.

ஆனால், இந்தப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வரும் நாளை மறுநாள் 7 மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்று பேசுகிறார். இதனால்தான் அவரது சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்.