அல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு..? சுவாரஸ்ய தகவல்கள்..!

1486

அல்வா கிண்டுவதற்கும் பட்ஜெட் தயாரிப்பதற்கும் என்ன தொடர்பு. சுவாரஸ்யமான பின்னணி தகவல்கள் என்ன? என்பதைப்பற்றி பார்ப்போம்….

ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்வது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் பட்ஜெட் பணியை துவங்குவதற்கு முன்பு அல்வா கிண்டுவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. பட்ஜெட் அச்சடிக்கும் பணியைத்தொடங்குவதற்கு முன், ஒரு மரபாக அல்வா கிண்டி, நிதியமைச்சக பணியாளர்களுக்கு அல்வா வழங்கி தொடங்கப்படுகிறது.

அல்வா கிண்டிய பின்னர், பட்ஜெட் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் அரசின் முழு கட்டுப்பாட்டில்தான் இருப்பார்கள்.வெளியே செல்லக்கூடாது. தவிர்க்கமுடியாத மருத்துவகாரணங்கள் இருந்தால் மட்டுமே, சிகிச்சைக்காக வெளியே அனுப்பப்படுவர்.

அல்வா கிண்டி பட்ஜெட் பணிகளை தொடங்குவதற்கு பலகாரணங்கள் கூறப்படுகிறது. பொதுவாக, நமது நாட்டில் எந்தவொரு நல்ல காரியத்தையும் செய்வதற்கு முன்பாகவும் இனிப்பு பரிமாறுவது இந்தியர்களின் பண்பாடு கலாசாரம் ஆகும். அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா கிண்டும் மரபு பின்பற்றப்படுகிறது.

பல வகையான இனிப்பு பலகாரங்கள் இருந்தும், எதற்காக அல்வாவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அல்வா கிண்டுவது பற்றியும் அல்வா கொடுப்பது குறித்தும், மக்களும் அரசும் இருவேறு கருத்துகளை கொண்டிருக்கின்றனர்.

அல்வா போல தித்திக்கும் இனிப்புச்சுவையோடு மக்களுக்கு இனிமையளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்பதற்காகவே அல்வா கிண்டுவதாக அரசுகள் கூறுகின்றன.

மக்களோ தங்களுக்கு அல்வா கொடுப்பதை உணர்த்துவதற்காகவே இந்த அல்வா கிண்டப்படுவதாக நகைச்சுவையோடு கூறுகின்றனர். எது எப்படியோ அல்வா சுவையானது. பட்ஜெட் தேவையானது. சுவையும் தேவையும் இணைந்து அல்வாபோல பட்ஜெட் இனிக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு….

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of