மனைவி, மாமியார் அடுத்தடுத்து கொலை! “இதுக்கெல்லாம் கொலையா”? தேனியில் கொடூரம்!

1129

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை அமுல் நகரில் வசிப்பவர் மணிகண்டன் (44) என்பவர்தான் கொலையாளி. மணிகண்டன், மனைவி பழனியம்மாள் (40), மற்றும் அவரது மாமியார் முத்தம்மாள் (70) ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

தனது மனைவி பழனியம்மாளை, தனது சொந்த ஊரான ஏழுகல்லுப்பட்டிக்கு குடியிருக்க வருமாறு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அவரோ தாயாருடன், அமுல் நகரில் வசித்து வருவதையே விரும்பினார்.

இந்நிலையில் நேற்று மனைவியுடன் சண்டையிட்டு விட்டு வெளியே சென்று விட்டார். மீண்டும் நள்ளிரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்கு வாதம் முற்றியதால் அங்கு இருந்த அரிவாளை எடுத்து பழனியம்மாள் மற்றும் மாமியார் முத்தம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் இரத்த வெள்ளத்தில் கிழே சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரையும் படுகொலை செய்து விட்டு வீட்டிற்கு வெளியே வந்த மணிகண்டன், வெளியூர் சென்றுவிட்டு, அந்த நேரத்தில், வீட்டிற்கு வந்த பழனியம்மாளின் அண்ணன் பழனிமுத்துவை பார்த்து அரிவாளைக் காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

தப்பி ஓடிய மணிகண்டன் அருகே உள்ள பண்ணைப்புரம் வழியாக சென்று கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதனால் அவரை பிடித்து கோம்பை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருந்த போது கோம்பை காவல் நிலையம் வந்தார் பழனிமுத்து.

தனது தங்கை மற்றும் தாயாரை மணிகண்டன் கொலை செய்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ரத்தவெள்ளத்தில் இறந்த நிலையில் இருந்த பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இரட்டை கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கேம்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் கோம்பை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரை மாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இரட்டை கொலை நடந்துள்ளதே என அப்பகுதி மக்கள் பேசி வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of