பொய் வழக்குகள் மூலம் தன்னை ஒரு போதும் அடக்கிவிட முடியாது – திருமுருகன் காந்தி

912

பொய் வழக்குகள் மூலம் தன்னை ஒரு போதும் அடக்கிவிட முடியாது என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியது, அரசுக்கு எதிராக அவதூறாக பேசியது, அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தியது, என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்த போது, மற்றொரு வழக்கை காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் திருமுருகன் காந்திக்கு சென்னை எழும்பூர், செங்கல்பட்டு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து, 55 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, பொய் வழக்குகளின் மூலமாக ஜனநாயக குரல்களை பாஜகவின் உத்தரவுக்கு ஏற்ப தமிழக அரசு ஒடுக்கு முறையை கையாண்டு வருவதாக கூறினார்.

தமிழகத்தில் சட்டவிரோதமான ஆட்சி நடப்பதாகவும், மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுப்பவர்களின் குரலை நசுக்குகிற வேலையை செய்து வரும் ஆட்சியாளர்களே சமூக விரோதிகளாக இருப்பதாக திருமுருகன் காந்தி குற்றம் சாட்டினார்.

அதிமுக அரசை வைத்து பாஜக தமிழகத்தை அழித்து வருவதாக கூறிய அவர், பொய் வழக்குகள் மூலமாக தங்களை ஒரு போதும் அடக்கிவிட முடியாது என்றார்.

Advertisement