வரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்

650

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே மணியம்பள்ளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் பிரதீபா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 9மாத குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் பிரதீபாவிற்கும் அவரது மாமியார் ராஜம்பாளிற்கும் அடிக்கடி சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் வந்து உறங்கிக்கொண்டிருந்த ராஜம்பாள் மீது ஐந்து லிட்டர் மண்ணெண்ணெயை ஊற்றி அவரது மருமகள் பிரதீபா தீ வைத்துள்ளார்.

இதில் 90 சதவீதம் தீக்காயமடைந்த ராஜம்பாள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜாம்பாள் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு தீவைத்த மருமகள் பிரதீபாவை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வரதட்சணைக் கேட்டு மாமியார் ராஜாம்பாள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், மேலும் தனது கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் மாமியார் தனக்கு இடையூறு செய்ததாகவும் அதனால் தனது மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டு அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் பிரதீபா கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக மாமியாரை மருமகளே மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement