பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும் நலஉதவி வழங்கவேண்டும் – பொன்குமார் அரசுக்கு வேண்டுகோள்

736

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“இந்தியாவில் கொரோனா நோய் தாக்கமும், இறப்பு விகிதமும் கூடுவதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நோய்த்தடுப்பிற்கு இதுதான் வழி என்றால் அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் அன்றாட காய்ச்சிகள், அடிமட்ட மக்கள், அமைப்புசாராத் தொழிலாளர்களின் நிலையையும் மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும். அண்டை நாடான சீனாவில் தோன்றிய இந்த நோய் ஐரோப்பிய நாடுகளில் பறவிய போதே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமேயானால் ஜனவரி 30 ஆம் தேதி முதல் நோயாளியை இந்தியா அடையாளப்படுத்திய பின்னராவது விழித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நோய் குறித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்ததைப் பற்றி கவலைப்படாமல் நாடாளுமன்ற, சட்டமன்றங்களை நடத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டின.

திடீரென விழித்துக் கொண்டு எந்த முன்னறிவிப்புமின்றி 3 வார ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால் அன்றாடம் வேலைக்கு போனால்தான் கூலி, கூலி கிடைத்தால் தான் அன்றைய அடுப்பு எரியும் என்ற நிலையில் உள்ள கோடானக்கோடி கட்டுமானத்தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாராத் தொழிலாளர்களின் நிலை மிக மோசமாக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து வேலை செய்து வரும் இந்த அமைப்புசாராத் தொழிலாளர்கள் வேலை இழந்து, ஊதியம் இழந்து, உணவின்றி, ஊர் திரும்ப முடியாமல் லட்சக்கணக்கானவர்கள் அல்லல்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தது.

அதுவும் நலவாரியங்களில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த நிதி என அறிவித்துள்ளது. இது கொரோனாவை விட கொடியதாகும். இந்த இக்கட்டான காலகட்டத்தில் பதிவு புதுப்பிக்கப்படவில்லை என அரசு பாரபட்சம் காட்டக்கூடாது.

இந்தநிலையில் மேலும் 1000 ரூபாய் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி இன்னும் இந்தத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும், அரிசியும் போய்ச் சேரவில்லை என்பது வருத்தமான ஒன்றாகும்.

பசிக்கு கிடைக்காத பணம் எதற்கு? கட்டுமானத் தொழிலாளர்கள் நல நிதியாக இந்த வாரியத்தில் ரூ.3500 கோடிக்கு மேல் பணம் உள்ளது. இந்தப் பணம் தொழிலாளர்களின் நலனுக்கானதாகும். இப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டத்தில் கூட இந்த பணத்தை தொழிலாளிக்கு வழங்க அரசுக்கு மனம் வரவில்லை.

டெல்லி அரசு கட்டுமானத்தொழிலாளர்களுக்கு 5000 ரூபாயும், பஞ்சாப் அரசு 3000 ரூபாயும், அரியானா அரசு 4000 ரூபாயும் வழங்கியுள்ளது. இப்போது ஊரடங்கு மே 3 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நொடிந்துபோயுள்ள இப்படிப்பட்டத் தொழிலாளர்களை இந்த ஊரடங்கு நீட்டிப்பு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும். கொரோனா நோயை விட கொடியது கொடும் பசி என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். எனவே தமிழக அரசு ஊரடங்கு நீடிப்பால் பெரும் பாதிப்படையும். அமைப்புசாராத் தொழிலாளர்கள் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ5000மாவது வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் புதுப்பித்தல் என்ற பாகுபாடு காட்டாமல் ரூ 5000 வீதம் வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட முன்வரவேண்டும். மத்திய அரசும் இதற்கான திட்டத்தை உடனடியாக அறிவித்திட வேண்டும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of