ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 52 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் அமித் பன்ஹால் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கார்லோ பாலமை மோதினர். ஆட்டம் தலா 3 நிமிடம் வீதம் 3 சுற்று கொண்டது.
முதல் சுற்றில் கார்லோ பாலம் பலமான தாக்குதல்களை தொடுக்க, அமித் பன்ஹால் தடுப்பாட்ட யுக்தியை சாதுர்யமாக கையாண்டார். அடுத்தடுத்த சுற்றுகளில் இருவரும் மாறி மாறி தங்களது திறமையை நிரூபித்தனர். இருப்பினும் முடிவில் அமித் பன்ஹால் நடுவர்களின் ஒருமித்த தீர்ப்பின்படி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.