உலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..!

1644

2019-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2020 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். கடந்த வருடம் பல்வேறு மறக்கமுடியாத சம்பவங்கள் உலக அரங்கில் நடைபெற்றது குறித்து தற்பொழுது பார்க்கலாம்…

 

ஜனவரி 10, 2019: வெனிசுவேலா தேசிய பேரவை குவான் குவைடோவை இடைக்கால தலைவராக அறிவித்ததோடு, அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை தொடங்கியது.

குவைடோவை வெனிசுவேலாவின் இடைகால தலைவராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏற்றுகொண்டிருந்தன.

இதையடுத்து வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொண்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெனிசுவேலாவில் அதிகாரத்தை அபகரிக்கப்பார்ப்பதாக ரஷ்யா கண்டித்தது.

ஜனவரி 28 : ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரி மெங் வான்ட்சொ-ஐ அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா கைது செய்தது. இந்த சம்பவம் கனடா, சீனா, அமெரிக்கா இடையே ராஜ்ஜீய சர்ச்சையாக உருவாகியது. ஹுவாவெய் நிறுவனத்தை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் சேர்த்தது.

இரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை ஹூவாவெய் நிறுவனமும், அதன் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொ-வும் மீறினார்கள் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஹூவாவெய் மறுக்கிறது.

மெங் வான்ட்சொ-ஐ கைது செய்த்து மனித உரிமை மீறல் என்று தெரிவித்த சீனா, இரண்டு கனடா நாட்டவரை கைது செய்து, அவர்கள் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டியது.

 

பிப்ரவரி 3 : ஐக்கிய அமீரகம் சென்ற போப் பிரான்சிஸ் அரேபிய தீபகற்பத்திற்கு செல்லும் முதல் போப் என்ற பெருமை பெற்றார். அபுதாபி வந்த அவரை முடியரசர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் வரவேற்றார்.

போப் பிரான்சிஸ் பங்கேற்ற மதநல்லிணக்க கூட்டத்தில் சுமார் 120,000 பேர் கலந்துகொண்டனர். சௌதி அரேபியா பங்கேற்றுள்ள நிலையில், அரேபியா செல்லும் முன் ஏமன் போர் குறித்து போப் கவலை தெரிவித்திருந்தார்.

 

பிப்ரவரி 27: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் இரண்டாவது சந்திப்பு பிப்ரவரி 27ம் தேதி இரவு விருந்துடன் தொடங்கி வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டு நாட்கள் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், இரண்டாம் நாள் கூட்டத்தின்போது, வடகொரியாவின் கோரிக்கைகள் முழுவதையும் ஏற்றுகொள்ள முடியாது என்று கூறி டிரம்ப் வெளிநடப்பு செய்தார்.

 

மார்ச் 15: கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள மிகப் பெரிய மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நியூசிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டு வைக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

 

ஏப்ரல் 15: பாரிஸ் நகரில், தீ விபத்தால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயம் சேதமடைந்தது.

தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் ஆகியன கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்தன.

இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டுகளைக் கொண்ட கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கியப் பகுதிகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

400 தீயணைப்பு வீரர்கள் இணைந்து சுமார் 15 மணிநேரம் போராடி இந்த தீயை முழுமையாக கட்டுக்கு கொண்டு வந்தனர்.

ஏப்ரல் 21: இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 259 பேர் கொல்லப்பட்ட நிலையில், 500-க்கும் மேலானோர் காயமடைந்தனர்.

2009ம் ஆண்டு இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்து உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற மிக பெரிய தீவிரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

 

மே 1: தாய்லாந்து அரசராக மகா வஜ்ரலாங்கோர்ன் மணிமுடி சூட்டப்பட்டார். முடிசூடும் சடங்குகள் மூன்று நாட்கள் நடைபெற்றன.

நீண்டகாலம் ஆட்சி செய்த தந்தை பூமிபோன் அடூன்யடேட் 2016ம் ஆண்டு இறந்த பின்னர், 66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் அரசமைப்பு சட்ட முடியாட்சியின் மன்னரானார்.

மே மாதம் முதல் நாள், தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவர் ஜெனரல் சுதிடா வஜ்ராலங்கோர்ன் நா அயூடியா என்பவரை அரச குடும்பத்தில் சேர்த்து திருமணம் செய்து கொண்ட மன்னர் வஜ்ராலங்கோர்ன், தாய்லாந்தின் அரசியாக சுதிடா விளங்குவார் என்று அறிவித்தார்.

 

மே12: மே12ம் தேதி அரம்கோ நிறுவனத்தின் இரண்டு எண்ணெய் கப்பல் உள்பட நான்கு கப்பல்கள் சேதமடைந்தன. இதற்கு இரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

மே 23: தமிழகத்தின் வேலூர் தொகுதி நீங்கலாக, இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரை தேர்வுசெய்ய இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து மொத்தம் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனையடுத்து மே 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டு ஆட்சி அமைத்து, பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார்.

 

ஜூன் 9: சந்தேக நபர்களை பெருநிலப்பகுதி சீனாவிடமும், மக்கௌவிடமும் ஒப்படைக்க வழிசெய்யும் மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தில் 10 லட்சத்திற்கு மேலானோர் கலந்து கொண்டனர்.

1997ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் வழங்கப்பட்ட பின்னர், நடைபெறும் மிக பெரிய போராட்டம் இதுவாகும்.

ஜூன் 13: ஜூன் 13ம் தேதி நடைபெற்ற இன்னொரு எண்ணெய் கப்பல்கள் தாக்குதல், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா 1000 படைவீரர்களை நிறுத்த காரணமாகியது.

ஜூன் 20: ஜூன் 20ம் தேதி அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது.

செப்டம்பர் 14: செப்டம்பர் 14ம் தேதி சௌதி அரேபியா எ்ணணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், செப்டம்பர் 21ம் தேதி, பல நுற்றுக்கணக்கான துருப்புக்களை வளைகுடாவுக்கு அனுப்பவும், ஆயுதங்களை விற்கவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி வழங்கினார்.

ஜூலை 24: பிரெக்ஸ்ட் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புகொள்ள மறுத்துவிட்டதால், பிரிட்டனின் முன்னாளர் பிரதமர் தெரீசா மே பதவி விலகுவதாக ஜூன் 7ம் நாள் அறிவித்ததோடு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகினார்.

போரிஸ் ஜான்சன்

ஜூலை 24ம் தேதி பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார்.

 

ஆகஸ்ட் 21: பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காட்டில் தீ பற்றி பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது.

இந்த காட்டுத்தீ ‘சர்வதேச நெருக்கடி’ என்று விவாதிக்கப்படும் அளவுக்கு பெரிய அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அந்த வார இறுதியில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு பெரிய பிரச்சனையானது.

செப்டம்பர் 20: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் உலகெங்கும் தொடங்கியது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செப்டம்பர் 27ம் தேதி செயற்பாட்டளார் கிரேட்டா துன்பர்க் மோன்ரீலில் நடத்திய போராட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றனர். அன்று உலகெங்கும் நடைபெற்ற போராட்டங்களில் 40 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்:

செப்டம்பர் 24: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் தொடர்பான முறையான விசாரணைக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பலோசி அறிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகள் அவையில் இந்த விசாரணை தொடங்கியது.

தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது குறித்த முறையான விசாரணை ஒன்றை அந்நாட்டின் ஜனநாயக கட்சியினர் துவக்கியுள்ளனர்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ”குப்பை” என்று வர்ணித்திருந்தார்.

 

அக்டோபர் 1: இராக் நாட்டு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகக் செப்டம்பர் இறுதிநாட்கள் முதல் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

மிக அதிகமாக இருக்கும் வேலைவாய்ப்பின்மை, மோசமான பொதுச் சேவைகள், மற்றும் ஊழல். இதுதான் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தது.

டிசம்பர் 23: கடந்த ஆண்டில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியது.

துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் இருக்கும் சௌதி அரேபியாவின் துணை தூதரகத்தில் அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சௌதி அரசு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த ஆண்டின் இறுதியில் அவரது கொலையாளிகள் என்று சௌதி அரசு கூறும் நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை சௌதி மீது எழுந்துள்ள சர்வதேச கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களை போக்கும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of