தமிழுக்காக மாணவன் செய்யும் புரட்சி…உலக சாதனை படைத்த லோகேஷ்…! – பிரத்யேக தொகுப்பு

2510

இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் தமிழ் சமூகத்தில் பெருகிவருவதை காணமுடிகிறது..

தனியார் பெருநிறுவனங்கள் முதல் படிக்கும் கல்லூரி வரை அனைத்து இடங்களிலும் ஆங்கிலம் என்பது நாகரீகமாக மாறிவருகிறது..

மாணவர்களுக்கு தமிழின் மீதான ஆர்வம் குறைந்துவருகின்ற இந்த சூழலில் தமிழுக்காகவே பாடுபடுவேன் என முயற்சித்து அதில் உலக சாதனையையும் படைத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் கல்லூரி மாணவர் லோகேஷ்.

இதுகுறித்து லோகேஷிடம் தொடர்பு கொண்டு பேசினோம்..

”என் பெயர் லோகேஷ். என் அப்பா பெயர் சிவா. அம்மா கனிமொழி . அப்பா பாத்திரக்கடை வியாபாரி. நான் சென்னையில் உள்ள அரும்பாக்கம் என்னும் பகுதியில் வசிக்கிறேன். நான் ஜேப்பியார் SRR பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு செல்ல இருக்கிறேன்.

சிறுவயதில் இருந்து சாதிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது .. கல்லூரியில் சிவில் ஆசிரியர்கள் பக்கபலமாக இருந்தார்கள் என்னை உற்சாகப் படுத்துவார்கள்.
நான் போட்டியிடும் நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள்.

சமூக வலைதளத்தின் ஒரு அங்கமான இன்ஸ்டாகிராம் எனக்கு நல்ல நண்பர்களை பெற்று தந்தது. அவர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள்.
எனக்கு பள்ளி பருவத்திலிருந்தே தமிழ் மீதும், தமிழ் கலைகள் மீதும் ஆர்வம் அதிகம்.
ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

பள்ளி பருவம் முடிந்த பிறகு தமிழ் மீது ஆர்வம் காட்ட முடியவில்லை.பள்ளியில் படிக்கும் போது ஒரு பாடமாவது தமிழ் இருக்கும். ஆனால் கல்லூரியில் எதுவும் தமிழில் இல்லை.
இந்த காலத்தில் மாணவர்கள் யாருக்கும் தமிழ் மீது ஆர்வம் அதிகம் இல்லை என்பது தெரியவந்தது.ஒரு நாள் என் நண்பர்களிடம் ’க ங ச’ எழுத்துக்களை வரிசையாக எழுத சொன்னேன்.


அவர்கள் அதிக பிழையுடன் எழுதினார்கள்; சிலர் எழுத மறுத்துவிட்டார்கள் .எனக்கு மிகவும் மன வருத்தம் அளித்தது.அப்போது தான் புரிந்தது இணையதளத்தில், சினிமாக்களில் மட்டும் தான் தமிழ் பற்றி பேசுகிறார்கள்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் மிகவும் அது மிகவும் சொர்ப்பமாக காணப்படுகிறது. இதனையடுத்து தமிழ் மொழியை பாதுகாக்கவும், தமிழுக்காக சாதனை புரியவேண்டும் எனவும் முடிவு செய்தேன்..

நான் ”micro-art” என்று சொல்லக்கூடிய நுண்கலையில் அதிகம் ஆர்வம் கொண்டவன்.பல சமூகம் சார்ந்த செய்திகளை இந்த நுண்கலை மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்து இருக்கிறேன். நான் செய்த அனைத்தையும் வைத்து நிகழ்ச்சி ஒன்று நடத்தினேன்.

இந்த நுண்கலை மூலம் தமிழ் எழுத்துகளை செதுக்க வேண்டும் என்று முடிவு செய்து,பென்சிலில் சிறிய ஊக்கால் 40 மணிநேரத்தில் 247 தமிழ் எழுத்துகளை செதுக்கினேன். எனது படைப்பை அங்கிகரித்த ”கலாம்களின் உலக சாதனை புத்தகம் (Kalams Book Of World Records), உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்துள்ளது.
சுவாசம் என்ற ஒரு அமைப்பில் நான் இணைந்து தமிழுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறேன்.

இந்த அமைப்பில் உள்ள அனைவரும் இறுதி வரை தமிழ் இனத்திற்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம். தமிழ் இனத்திற்காகவும் தமிழ் மொழிக்காகவும் பாடுபடும் தமிழ் தலைவர்களுக்கு இறுதி வரை பக்க பலமாக இருப்போம்.

இந்த தமிழ் சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து சுவாசம் என்ற பெயரில் ஒரு பொது சேவை அமைப்பு தொடங்கினோம்.

இந்த அமைப்பின் கொள்கைகளுள் ஒன்றான தனிமனித மாற்றம் மற்றும் தமிழ் வளர்ச்சி போன்றவற்றிற்காக செயல்பட வேண்டும் என்று முடிவு எடுத்தேன் .

நான் பல சாதனைகளை என் தமிழ் சமுதாயத்திற்கு செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

பொருளாதார ரீதியாக அதற்கு வாய்ப்பு கிடைப்பதில் சற்று கடினமாக இருக்கிறது. என் மொழிக்காகவும், என் சமூகத்திற்காகவும் நான் இறுதிவரை பாடுபடுவேன்.


தமிழை யாரும் காக்க அவசியம் இல்லை “கல்தோன்றி மந்தோன்றா காலத்தில் முந்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ் குடி”
அனைவரும் தமிழை பயன்படுத்துவோம். என்றும் உலகம் இருக்கும்வரை தமிழின் பெருமையும் தமிழனின் பெருமையும் பேசப்படும்.”என இலட்சிய வேட்கையோடு தனது பேச்சை முடித்தார் மாணவர் லோகேஷ்..

தமிழுக்காக உங்களுடைய மகத்தான பணி தொடரட்டும் என வாழ்த்தி விடைபெற்றோம்..

தமிழை ஒரு பொருட்டாகவே மதிக்காத தமிழ் மாணவர்கள் இருக்கும் நிலையில் தமிழுக்காக தனது வாழ்க்கையில் சாதனை படைத்து வரும் லோகேஷின் கரம் வலுப்பெற நாமும் வாழ்த்துவோம்..

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of