எம்.எல்.ஏ க்களுடன் பேரம் – ஆடியோ என்னுடையது தான் – மாட்டிக்கொண்ட எடியூரப்பா

349

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ வை தன்பக்கம் இழுக்க பேரம் பேசிய ஆடியோ தன்னுடையது தான் என கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா ஒப்புக்கொண்டுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. கர்நாடகா முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் பா.ஜனதா ஆட்சி அமைத்துவிடலாம்.

இதற்காக கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகியோர் மும்பையில் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 8-ந் தேதி பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் அந்த கூட்டத்திற்கு வரவில்லை. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு கொடுப்பது என சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் கடந்த 8-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய உரையாடல் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

அந்த உரையாடலில் இருப்பது தனது குரல் இல்லை என்று மறுத்த எடியூரப்பா, முதல்-மந்திரி குமாரசாமி தனது தோல்விகளை மறைக்க போலி ஆடியோவை வெளியிட்டு நாடகமாடுகிறார் எனவும் சாடியிருந்தார்.

மேலும், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் எடியூரப்பா அறிவித்திருந்தார்.  பா.ஜனதாவினரும், குமாரசாமி வெளியிட்ட பேர ஆடியோ போலியானது எனவும் கூறி வந்தனர்.

அந்த ஆடியோவை குரல் பரிசோதனைக்காக அனுப்ப உள்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பேரம் பேசியதாக குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா நேற்று திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து முதல் மந்திரி குமாரசாமி உத்தரவிட வேண்டும். 15 நாட்களுக்குள் சட்டசபையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா நடத்திய பேரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை அமைத்து முதல் மந்திரி குமாரசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of