இவர்களுடன் இணைவதை விட கடலில் குதிக்கலாம்.., தினகரன் பிரச்சாரம்

723

மத்திய சென்னை, வட சென்னை மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிகளிலும், பெரம்பூர், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டம் சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில்,

“ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடினார். தமிழ்நாட்டு மக்கள் எப்போது இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இடைத்தேர்தலில் 8 இடங்களில் அதிமுக வெற்றி பெறாவிட்டால், இவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். இந்தியா முழுவதும் மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் மாறி இருக்கிறார்கள்.ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்க நான் தான் காரணமாக இருந்ததாக எல்லோரும் கூறினார்கள். தமிழகத்தில் ஜெயலலிதா அனுமதிக்காத ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு அவர் அனுமதி அளித்தது தான், பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்றியதற்கு உண்மையான காரணம் அதுதான்.

அதிமுக-வில் பிரச்சினை என்றால் எதற்கு பாஜக-வுக்கு ஏன் வியர்த்து கொட்டுகிறது? அடுத்த வீட்டில் ஏன் பாஜக எட்டி பார்க்கிறது? நாங்கள் யாரிடமும் மண்டியிட்டு பழக்கம் இல்லை. நாங்கள் ஜெயலலிதாவுடன் 35 ஆண்டுகள் இருந்தவர்கள். ஒரு போதும் பாஜக-வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.

அதிமுக-வுடன் அமமுக சேரும் என மதுரை ஆதீனம் கூறியதற்கு நான் உடனே மறுப்பு தெரிவித்தேன். இந்த துரோகிகளுடன் இணைவதற்கு பதிலாக கடலில் குதிக்கலாம். இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக-வினர் பலர் எங்களுடன் இணைவார்கள்” என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of