“டாஸ்மாக் அங்கேயே இருக்கட்டும்.. பள்ளியை அங்கிருந்து மாத்துங்கய்யா” – இளம்பெண் பரபரப்பு கடிதம்

982

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா மைலம்பாடி கிராமத்தில், விவசாய நிலத்தில் மதுக்கடையைத் திறக்கக்கூடாது (மதுக்கடை எண்- 3571) என்பது கடந்த ஒரு வருட காலமாக பூதாகர பிரச்னையாக இருந்துவருகிறது.

அதிகாரிகளிடம் மனு அளிப்பதில் தொடங்கி, பல கட்டப் போராட்டங்களையும் நடத்திய மைலம்பாடி கிராம மக்கள, இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.

`விவசாய நிலங்களில் மதுக்கடைகளைத் திறக்கலாமா’ என சென்னை உயர் நீதிமன்றமும் சமீபத்தில் அரசிடம் கேள்வி எழுப்பியது. இப்படி பலகட்ட எதிர்ப்புகள் இருந்தும், போலீஸார் துணையுடன் அந்த டாஸ்மாக் திறக்கப்பட்டிருக்கிறது. இது, அந்தக் கிராம மக்களிடம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து, ‘ஈரோடு மக்கள் பாதை’ அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் `மதுக்கடை அங்கேயே இருக்கட்டும். பள்ளிக்கூடத்தை அங்கிருந்து மாற்றிடுங்க ஐயா’ எனப் பரபரப்பான புகார் மனுவைக் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து தமிழரசி கூறும்பொழுது “இந்த மதுக்கடைக்கு அருகே வெறும் 300 மீட்டர் தூரத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றும், பால் சொஸைட்டி ஒன்றும் இருக்கின்றன.

பெண்களுக்கும், பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளுக்கும் இந்த டாஸ்மாக் கடையால் பாதுகாப்பு இருக்காது எனக் கடந்த ஒரு வருடமாகக் கடுமையாகப் போராடினோம். மதுபோதையில் இருப்பவர்களால்தான் சிறுமிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அப்படியிருந்தும் போலீஸார் பாதுகாப்போடு இன்றைக்கு அந்த டாஸ்மாக் கடையைத் திறந்திருக்கின்றனர்’’ என்றார்.

தொடர்ந்து பேசியவர்,“விவசாய நிலத்தில் மதுக்கடையைத் திறக்க அனுமதிக்கக்கூடாது என நாங்கள் போராடுகிறோம். ஆனால், பவானி தாசில்தார் உதவியோடு அந்த விவசாய நிலத்தை தரிசு நிலம் என வகைப்பாட்டை மாற்றியிருக்கின்றனர்.

எல்லா இடத்துலயும் படிப்படியாக மதுக்கடைகளை மூடுறோம்னு சொல்லிட்டு திறந்துக்கிட்டு வர்றாங்க. அதேநேரத்துல, பள்ளிக்கூடத்தை மூடிக்கிட்டு வர்றாங்க. `இந்த இடத்துல மதுக்கடையைத் திறக்காதீங்க’ன்னு பள்ளிக் குழந்தைகள்கூட ஒரு தடவை கலெக்டரிடம் மனு கொடுத்திருக்காங்க.

ஆனா, எதையுமே அரசு பொருட்படுத்தலை. அரசு, அந்த மதுக்கடையை மூடாவிட்டாலும் பரவாயில்லை. அங்குள்ள பள்ளிக்கூடத்தை இடம் மாற்ற உத்தரவிட்டு, அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளையாவது, குறிப்பாகப் பெண் குழந்தைகளையாவது குடிகாரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுகிறேன்” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of