“காதலுக்கு கண்ணில்லை” என்பதற்கு உதாரணமாகிய தம்பதி..!

1822

சினிமா நடிகர்கள் போன்று மணமகன் வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் சுமார் 4 அடி உயரம் மட்டுமே உள்ள இளைஞனை இளம்பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


காதல்… என்ற மூன்றெழுத்து மந்திர சொல்லுக்கு மயங்காத மனிதன் இல்லை என்றும் கூறுமளவிற்கு பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. நிறம், தோற்றம், படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி மனம் ஒன்றுபட்டால் போதும், என்பதை மெய்ப்பிக்கும் வகையிலான காதல் கரூரில் அரங்கேறி, திருமணத்தில் முடிந்துள்ளது.

கரூர் மாவட்டம் பஞ்சமாதேவியை அடுத்த சோமூரைச் சார்ந்த இளைஞர் விக்னேஷ்வரன் (வயது 25). சுமார் 4 அடி உயரம் மட்டுமே கொண்ட இவர் தன்னம்பிக்கையுடன் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

பொழுது போக்கிற்காகவும், தனது தொழிலை விரிவுபடுத்தவும், முகநூலில் கணக்கு துவங்கிய விக்னேஷ்வரனுக்கு சிவகங்கையை சார்ந்த பவித்ரா (வயது 24) என்ற இளம்பெண் நண்பராக அறிமுகமானார்.

டி.பார்ம் படித்துக் கொண்டிருந்த அவரும், விக்னேஷ்வரனும் முகநூலில் நட்பை வளர்த்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவர்களது பழக்கம் காதலாக மாறியது.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அறிந்த பெண் வீட்டார் உனக்கும், விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லை. எனவே உங்கள் காதலை ஏற்க முடியாது, அவரை மறந்து விடு என்று வற்புறுத்தினர்.

ஆனாலும் மனதால் இணைந்த காதல் ஜோடி எந்த காரணத்தை கொண்டு நம்மை பிரிக்க நினைத்தாலும் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதன் தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்து பெற்றோர், உற்றார் உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

நேற்று கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து இருவரது பெற்றோரையும் வரவழைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி விட்டு சென்றனர்.

ஆனால் விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மணமகளை ஏற்றுக்கொண்டதால் அவர்கள் இருவரும் புதுவாழ்வை தொடங்க உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.

சினிமா நடிகர்கள் போன்று தனக்கு மணமகன் வேண்டும் என கனவு கண்டு கொண்டிருக்கும் பெண்களுக்கு மத்தியில் சுமார் 4 அடி உயரம் மட்டுமே உள்ள இளைஞனை இளம்பெண் திருமணம் செய்து கொண்டதை அப்பகுதியில் இருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து, மனதார ஆசீர்வதித்து சென்றனர்.