இளம்பெண்ணை கடத்த முயன்ற வாலிபர் – தடுத்த 2 பெண்கள் கார் ஏற்றிக் கொலை..!

541

இளம்பெண்ணை கடத்த முயன்றதை தடுத்த 2 தலித் பெண்களை காரை ஏற்றி கொன்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே நயாகான் என்ற கிராமம் உள்ளது.இந்த ஊரைச்சேர்ந்த ராம்வீர், அவரது மனைவி சாந்தோதேவி ராம்வீரின் சகோதரர் பீம்சந்த், அவரது மனைவி ஊர்மிளாதேவி, அவர்களது மகன் ஜிதேந்தர் மற்றும் 22 வயது உறவினர் பெண், உறவினர் திருபுவன் ஆகியோர் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த உயர்ஜாதி வாலிபர் நகுல்தாகூர் காரில் அங்கு வந்தார். அவர் அங்கு நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் கடத்த முயன்றார்.

இதனால் மற்றவர்கள் அதை தடுத்தனர். இதில் ஆத்திரம் அடைந்த நகுல் தாகூர் உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து அதே காரில் நண்பர்கள் சிலரை ஏற்றிக் கொண்டு வந்தார். அப்போது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த ராம்வீர் குடும்பத்தினர் மீது காரை வேகமாக ஓட்டி மோதச் செய்தார்.

இதில் ஊர்மிளாதேவி, சாந்தோதேவி ஆகிய 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஜிதேந்தர், திருபுவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முதலில் இது விபத்து என கருதப்பட்டது. அங்கிருந்த ஒரு சி.சி.டி.வி. கமேராவை ஆய்வு செய்தபோது இது விபத்து இல்லை என்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து நகுல்தாகூர் மீது கொலை, கொலை முயற்சி, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் தேடி வருகின்றனர்.